பத்து பஹாட், பிப்ரவரி 10 (பெர்னாமா) -- கடந்த மாத இறுதியில் ஜோகூர், தாமான் டாமாயில் தமது காதலியை கொலை செய்ததாக வேலையில்லா ஆடவர் ஒருவர் இன்று பத்து பஹாட் யொங் பெங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் அருண் நோவல் டாஸ் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை லிம் சி சியோங் புரிந்ததாக தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரிடமிருந்து எவ்வித வாக்கு மூலமும் பதிவு செய்யப்படவில்லை.
ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், இரவு 10 முதல் மறுநாள் காலை 11 மணி வரை, பத்து பஹாட் தாமான் டாமாயில் உள்ள வீடொன்றில் 41 வயதான லிம் பி லான் என்பவரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மரணத் தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவ்வாறு மரணத் தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12 பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் Lim மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சட்டப்பட்டவருக்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை.
பிரேதப் பரிசோதனை அறிக்கை, மரபணு சோதனை, சிசிடிவி எனப்படும் மறைக்காணி பதிவு உட்பட குற்றம் சாட்டப்பட்டவரின் மருத்துவ அறிக்கைக்காக வழக்கின் மறுசெவிமடுப்பு ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)