கோலாலம்பூர், 09 பிப்ரவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் அவசரத் தேவைகளின் அடிப்படையில், மத்திய சாலை பராமரிப்புக்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் 300 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
சரவாக் மற்றும் சபாவிற்கு தலா 20 கோடி ரிங்கிட் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், தீபகற்ப மலேசியாவில் முதன்மை சாலைப் பழுது பார்ப்பு பணிக்காகவும், பராமரிப்புக்காகவும் 30 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
''முந்தைய ஆண்டுகளில், நாங்கள் தீபகற்பத்திற்கு அதிகமான் நிதியை விநியோகித்திருந்தோம். பாராபட்சம் காரணமாக நாங்கள் இவ்வாறு செய்தோம் என்று இதற்கு அர்த்தமில்லை. ஆனால் அந்த நேரத்தில் தீபகற்ப மலேசியாவிற்கான நிதி தேவை அவசரமாக இருந்ததே இதற்கு காரணமாகும். எனவே, வேலை முடிந்த பிறகும் நாங்கள் நிறைய சேதங்களை சரிசெய்தோம், எனவே இவ்வாண்டு சரவாக் மற்றும் சபாவில் கூடுதல் தேவைகள் இருக்கலாம் என்பதை நாங்கள் கவனம் கொள்கிறோம்,'' என்றார் அவர்.
இன்று மக்களவையில் அரச உரையைப் பாராட்டுவதற்கான தீர்மானத்தின் மீதான விவாதத்தை நிறைவுபெறும் வேளையில் நந்தா அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)