Ad Banner
 பொது

சாரா உதவித் தொகை; கூடுதலாக உறைய வைத்த உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளது

09/02/2026 04:52 PM

புத்ராஜெயா, 09 பிப்ரவரி (பெர்னாமா) --  ரஹ்மா அடிப்படை உதவித் தொகை, சாராவின் கீழ் வழங்கப்படும் பொருள்கள் வகையில் தற்போதுள்ள அத்தியாவசியப் பொருள்களுடன் கூடுதலாக உறைய வைத்த உணவுகளும் சேர்க்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள், சாரா திட்டத்தில் பங்கேற்கும் சிறு சில்லறை விற்பனை கடைகளின் ஈடுபாடு 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"தற்போது ஒரு பிரச்சனை உள்ளது. காரணம் பெரிய கடைகளில் நாம் வாங்கலாம். எனவே, பலர் இதைப் பற்றி பேச தொடங்கினர். எனவே, தற்போது நாம் 10,000 சில்லறை விற்பனை கடைகளைப் பயன்படுத்துகின்றோம். நாடு முழுவதுமுள்ள 10,000 சில்லறை விற்பனை கடைகளில் வாங்குங்கள். இதன் மூலம் நாம் அதன் செயல்பாடுகளை மிக குறைந்த மட்டத்திற்கு விரிவாக மேம்படுத்த முடியும்", என்றார் அவர்.

மக்களின் அணுகலை மேம்படுத்தும் முயற்சியாக, சாரா உதவி தொகைக் கொண்ட கடைகளுக்குச் சென்றடையும் தூரம் முன்னதாக இருந்த 10 கிலோமீட்டரில் இருந்து 7 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று தொடங்கி 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை விநியோகிக்கப்படும் நிலையில், அதன் மூலம் 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட 2 கோடியே 20 லட்சம் மலேசியர்கள் பயனடைவார்கள் என்று அன்வார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)