Ad Banner
 பொது

இணையப் பயன்பாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் தீவிரம்

08/02/2026 05:17 PM

ஜாலான் குவாந்தான், பிப்ரவரி 08 (பெர்னாமா) -- நாட்டில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு முதல் இணையப் பயன்பாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவிருக்கிறது.

தற்போது இணைய வசதியை விரிவுபடுத்துவது இணைய வேகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் குறைப்பது மட்டுமல்லாமல் பயனீட்டாளர்களின் பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''புறநகர் பகுதிகள் வரை இணைய வசதியை ஏற்படுத்தி விட்டு அத்தளத்தைக் குற்றவாளிகள் நமது பாதுகாப்பையும் அமைதியையும் சீர்குலைப்பதற்கான ஒரு நெடுஞ்சாலையாக அமைத்துக் கொடுத்த ஒரு மோசமான முன்னுதாரணத்தை நான் விட்டுச் செல்ல விரும்பவில்லை'' என்றார் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

இன்று கோலாலம்பூரில் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி ஏற்பாட்டிலான 2026ஆம் ஆண்டுக்கான இணையப் பாதுகாப்பு தின தொடக்க விழாவில் உரையாற்றியபோது டத்தோ ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.

இணையம் எண்ணற்ற நன்மைகளை வழங்கினாலும் இணையக் குற்றவாளிகள் பயனீட்டாளர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் அது உருவாக்குவதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)