சிப்பாங், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா வந்தடைந்தார்.
மோடியை ஏற்றி வந்த சிறப்பு விமானம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-இன் பூஙா ராயா வளாகத்தில் மாலை மணி 4.40க்கு தரையிறங்கிய வேளையில், அவரை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
விமானத்தில் இருந்து இறங்கியவுடன், கேப்டன் முஹமட் அஃபிக் ஐமான் முஹமட் சுல்கிஃப்ளி தலைமையிலான அரச மலாய் ராணுவத்தின் முதலாவது படைப்பிரிவைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் 26 உறுப்பினர்களும் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதைச் செலுத்தினர்.
மலேசியாவின் அமைத்தியையும் ஒருமைப்பாட்டையும் எடுத்துக்காட்டும் வகையில், 12 இசைக்கலைஞர்களை உட்படுத்தி மலாய், சீன மற்றும் இந்திய இசைக்கருவிகள் உட்பட பல்லினங்களின் பாரம்பரிய இசையுடன் மோடி வரவேற்கப்பட்டார்.
பண்டார் பாரு சாலாக் திங்கி தமிழ்ப்பள்ளி உட்பட 100 மாணவர்கள் மலேசிய மற்றும் இந்தியக் கொடிகளை அசைத்து மோடியை வரவேற்றனர்.
பின்னர் அன்வாரும், மோடியும் ஒரே வாகனத்தில் தி மைன்ஸ் நோக்கி புறப்பட்டனர்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகள் உட்பட மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருவழி உறவு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என்று விஸ்மா புத்ரா முன்னதாக குறிப்பிட்டிருந்தது.
இன்று தொடங்கி நாளை வரை இரு நாள்களுக்கு மோடி அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
1957 ஆம் ஆண்டு அரச தந்திர உறவுகள் ஏற்பட்டதிலிருந்து, வலுவான நட்பின் அடிப்படையில், இப்பயணம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)