Ad Banner
 பொது

ஊழல் & அதிகார மீறலில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் முயற்சிகளில் அரசாங்கம் சமரசம் காணாது

07/02/2026 05:13 PM

கோம்பாக், 07 பிப்ரவரி (பெர்னாமா) --  அரசாங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் முக்கிய பொருப்புகளை வகித்த மூத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது உட்பட ஊழல் மற்றும் அதிகார மீறலிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் முயற்சிகளில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் காணாது.

தமது தலைமையிலான அரசாங்கம் ஒருமைப்பாடு மற்றும் நீதியின் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகவும், அனைத்து வகையான மோசடிகள் மற்றும் மக்களின் சொத்துகள் திருடப்படுவதில் இருந்து நாட்டை தூய்மைப்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''அதனால்தான் அவர்கள் எங்களுடன் மகிழ்ச்சியடையவில்லை. இந்த அரசாங்கம் கெஅடிலான் மற்றும் பி.எச் ஐ மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், ஒருமைப்பாட்டு அரசாங்கம் உறுதியானது மற்றும் சமரசமற்றது என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர். இந்த நாடு அதன் கொள்கைகளுடன் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் நாட்டின் செல்வத்தை ஏமாற்றிக் கொள்ளையடிக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டும்'', என்றார் அவர்.

சனிக்கிழமை சிலாங்கூர் கோம்பாக்கில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சி மாநாட்டில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு வலியுறுத்தினார்.

மேலும், ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து, அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல் வழக்குகளுக்கு எதிராக, துணிச்சலான மற்றும் நிலையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், இது முன்னர் அரிதாகவே விரிவாக மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் விவரித்தார்.

இதனிடையே, கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளைச் செய்ய மறுப்பது போன்று கட்சியைப் புறக்கணிக்கும் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு கெஅடிலான் கட்சியில் இடமில்லை என்று அதன் தலைவரான அன்வார் தெரிவித்தார்.

மக்களுக்கும் நாட்டிற்கும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே கட்சியின் தலைமைத்துவதற்கு மக்கள் அதிகாரம் அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)