Ad Banner
 பொது

மாநிலங்களில் இஸ்லாம் அல்லாத விவகார நிர்வகிப்புச் செயற்குழு

06/02/2026 03:08 PM

கோலாலம்பூர், பிப்ரவரி 06 (பெர்னாமா) -- வழிபாட்டுத் தலங்களுக்கான நிலம் குறித்த விவகாரங்கள் மற்றும் இஸ்லாம் அல்லாத பிற சமயங்களின் நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு, மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பிற்கு ஏற்ப, இஸ்லாம் அல்லாத விவகார நிர்வகிப்புச் செயற்குழுவை அனைத்து மாநிலங்களும் அமைத்துள்ளன.

மத விவகாரங்கள் மற்றும் நில விவகாரங்கள் தொடர்பான அனைத்தும், மத்திய அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில், அதாவது மாநிலப் பட்டியலில் வழங்கப்பட்டுள்ளபடி, மாநில அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்விவகாரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து மாநில அரசாங்கங்களும் சிறப்புச் செயற்குழுக்களை அமைத்துள்ளதாக, இன்று தமது முகநூல் பதிவில் ஏரன் டகாங் கூறினார்.

பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறப்புச் செயற்குழு தொடர்பான சில விளக்கப் படங்களையும் ஏரன் பதிவேற்றினார்.

வழிபாட்டுத் தலங்களின் நிலப் பயன்பாடு மற்றும் நிர்வகிப்பு தொடர்பான எந்தவொரு விவகாரமும் மாநிலச் சட்டம், பேச்சுவார்த்தை மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அணுகுமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று நேற்று அவர் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)