ஈப்போ, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- நாட்டில் உள்ள ஆலயங்களின் சமூகநல மேம்பாட்டிற்காக மடானி அரசாங்கம் பல நிதி உதவிகளை அவ்வப்போது தொடர்ந்து வழங்கி வருகின்றது.
இருப்பினும் அரசாங்கம் வழங்கும் அந்த நிதி உதவிகள் ஆலயத்தின் நீண்டகால தேவைக்குப் பொதுமானதாக இருக்குமா என்பதை சீர்த்தூக்கிப் பார்ப்பதுடன் பக்தர்களின் ஒத்துழைப்போடு நிதி திரட்டுவது சமூக சேவைத் திட்டங்கள் மற்றும் வருமானம் உருவாக்கும் செயல்பாடுகள் போன்ற முயற்சிகளை ஆலய நிர்வாகம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன் வழி ஆலயங்கள் பொருளாதார ரீதியில் வலுப்பெற்று சமூக முன்னேற்றத்திற்குச் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டுடன் இணைந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆன்மீகம் மற்றும் பண்பாடு சார்ந்த சில முயற்சிகளை ஆலய நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று எம்.குலசேகரன் வலியுறுத்தினார்.
''சுற்றுப்பயணிகள் மிகவும் முக்கியமானவர்கள். தைப்பூசக் காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் வாந்தாலும் பிற நாட்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். அவர்கள் ஆலயத்திற்கு வந்து அங்குள்ள சிலை மற்றும் வர்ணம் தீட்டிருக்கும் அழகை இரசிக்கின்றனர். இவ்வாண்டு 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு. எனவே, இம்முயற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. எனவேதான், நான் ஆலய நிர்வாகத்திடம் கூறினேன் ஒரு சிறு அருங்காட்சியகம் ஆலயத்தில் அமைக்க'', என்றார் எம். குலசேகரன்.
இதன் மூலம் நாட்டிலுள்ள ஆலயங்கள் சுற்றுலா வளர்ச்சிக்குத் துணைப் புரிவதோடு ஆன்மீகம் மற்றும் பண்பாடு சார்ந்த அனுபவங்களையும் சுற்றுப்பயணிகளுக்கு எடுத்துரைக்கும் என்று அவர் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு இரவு பகல் பாராது இரத ஊர்வலத்தில் பணியாற்றிய போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசாங்க ஊழியர்களுக்கும் ஈப்போ லிட்டல் இந்தியா பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கும் நேற்று உணவுகளை வழங்கியப் பின்னர் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதனிடையே, தைப்பூசத்தை முன்னிட்டு பேராக், புந்தோங், சுங்கை பாரியில் உள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திலிருந்து குனோங் செரோவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்குச் சென்ற இரதம் நேற்று மாலை மணி 6க்குப் பக்தர்கள் புடைசூழ மீண்டும் தாய் கோயிலை நோக்கி புறப்பட்டது.
சுமார் 13 மணிநேர பயணத்திற்குப் பிறகு இன்று காலை 7 மணிக்கு இரதம் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
இரத ஊர்வலத்தின் போது பெய்த மழையையும் பொருட்படுத்தாது, பக்தர்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் நின்று அர்ச்சனை செய்து கந்த பெருமான் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், தைப்பூசக் காலக்கட்டம் முழுவதும் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் உதவிகள் வழங்கிய தரப்பினர்களுக்கு ஆலய நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்து கொண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)