பினாங்கு, பிப்ரவரி 1 (பெர்னாமா) -- பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்கா-வில் அமைந்துள்ள தண்ணீர்மலை அருள்மிகு பால தண்டாயுதபாணி தேவஸ்தானத்திலும், தைப்பூசம் மிகவும் நேர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை 4 மணி தொடங்கியே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாண்டு 1,128 போலீஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் கூறினார்.
சுமூகமான செயல்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், நாளை இரவு தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் மீண்டும் தாய் கோயிலை நோக்கி புறப்படும் நிலையில், அவை சென்றடையும் வரை 24 மணி நேரத்திற்குப் பாதுகாப்பு பணி தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
அதோடு, நேற்று தொடங்கி இன்று காலை வரை சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைப் புரிந்திருக்கும் நிலையில், இன்றிரவு அந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, டத்தோ அஸிஸீ தெரிவித்தார்.
பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொள்ள வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்திருந்தாலும், அம்மாநில போக்குவரத்து சீராக உள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, இம்மாநிலத்திற்கே பிரசித்திப் பெற்ற தண்ணீர் பந்தல்களும் மக்களின் கவனத்தை ஈர்த்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)