Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

திருச்சூர் பூரம் விழா; யானை மீது வலம் வந்தார் பகவதி அம்மன்

27/04/2026 06:12 PM

திருச்சூர், ஏப்ரல் 27 (பெர்னாமா) --  கேரளா, திருச்சூரில் நடைபெறும் வடக்குநாதர் கோவில் பூரம் திருவிழா உலகப் புகழ் பெற்றது. 

இவ்வாண்டுக்கான விழா முறைப்படி நேற்று முன்தினம் தொடங்கி இருந்தாலும் முண்டத்திக்கோட்டில் அண்மையில் நிகழ்ந்த வாணவேடிக்கை ஆலை வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்ததோடு 40 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இத்திருவிழா மிகவும் எளிமையாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆயிரக் கணக்கான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாரம்பரிய இசை முழக்கம் சூழ, குற்றூரில் இருந்து பகவதி அம்மன் ஆடை, ஆபரணங்கள் அணிந்து, எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது ஏற்றப்பட்டு வடக்குநாதர் சன்னதி நோக்கிப் புறப்படும் காட்சியைக் காண அங்கு திரளான மக்கள் கூடினர்.

பாரம்பரிய பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்த போதும், அதிகாலையில் சடங்கு ரீதியான முழக்கம் விண்ணை முட்டும் அளவில் இருந்ததோடு முக்கிய சடங்குகளைக் காண மக்களின் கூட்டமும் அதிகரித்த வண்ணமாக இருந்தது.

பின், வடக்குநாதர் சன்னிதியில், பஞ்சவாத்திய இசைக்கேற்ப யானைகளின் அணிவகுப்பும் அதைத் தொடர்ந்து, செண்டை மேளம் முழங்க நடந்த நிகழ்ச்சியில் 15 யானைகள் அணிவகுப்புடன் எழுந்தருளிய பரமேக்காவு பகவதி அம்மன், வடக்கு நாதர் சன்னிதிக்கு வரும் வைபவமும் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இலஞ்சித்தறைமேளம் எனப்படும் செண்டை மேள நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.

விழாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆளில்லா விமானம் மற்றும் மறைக்காணியின் துணையும் நாடப்பட்டிருந்தது.

விழாவின் முக்கிய அங்கமான குடை மாற்றம் நிகழ்வு இன்று மாலை நடைபெறுவதாக ஆலயத் தரப்பு தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)