Ad Banner
 பொது

அனைவரையும் ஒன்றிணைக்கும் சபா தைப்பூசம்

01/02/2026 04:15 PM

கோத்தா கினாபாலு, 01 பிப்ரவரி (பெர்னாமா) --   இன மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் சபாவிலும் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோத்தா கினாபாலு, லோக் காவியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் மலாய், சீனர், கடசான் மற்றும் டூசுன் போன்ற பிற சமூக மக்களின் வருகையால் தைப்பூச சூழல் அங்கு மிளிர்ந்திருந்தது.

1970-களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம், சபாவிலுள்ள இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த மாநில மக்கள் பன்முகத்தன்மை கொண்ட சூழலில் வாழ்ந்து பழகிவிட்டதால், சபாவில் உள்ள மத ரீதியான கொண்டாட்டங்களில் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது இயல்பான ஒன்று என்று ஆலயத்திற்கு வருகைத் தந்த சிலர் கூறினர்.

இங்கிருக்கும் தனித்துவமான கலாச்சாரம், உற்சாகமான கொண்டாட்ட சூழல் மற்றும் பல்லின மக்களின் ஒற்றுமை போன்றாவை, ஆண்டு தோறும் தைப்பூசக் கொண்டாட்டத்தை மேலும் மெருங்கூட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

"சபாவில் எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும், எல்லா இனத்தவரும் ஒன்று கூடுவோம். இங்கு இஸ்லாமியர்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைவரும் உள்ளனர்'', என்று ஷாஸ்வானி அப்துல் ஹருன் கூறினார்.

''நாங்கள் இந்திய கலாச்சாரத்தை விரும்புகிறோம். தைப்பூசத்தை அவர்களோடு கொண்டாடுகிறோம். அவர்களிடம் அப்படி ஒரு தனித்துவம் இருப்பது எனக்குப் பிடிக்கும்'', என்றார்  மிகோ யிங்யீங்.

"ஏனெனில் நாங்கள் இங்குப் பல்லின மக்களாக வாழ்கிறோம், மேலும் இங்கிருக்கும் கலாச்சாரம் தீபகற்ப மலேசியாவிலிருந்து மாறுபட்டது. இங்கு மக்கள் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு பண்டிகை என வரும்போது நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகிறோம். இதுவே சபாவின் தனித்துவமான மற்றும் வித்தியாசமான அடையாளமாகும்", என்று லோக் காவி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தலைவர் கேப்டன் எம்.ஷாமளாதேவி தெரிவித்தார்.

இவ்வாலயத்தின் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளில் இந்தியர் அல்லாத சமூகத்தினரும் உதவுவது, சபா மக்களின் அடித்தளமாக விளங்கும் நல்லிணக்க உணர்வும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)