கோலாலம்பூர், ஜனவரி 30 (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இவ்வாண்டு மார்ச் 2-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில், ஒப்பந்த அடிப்படையில், கிரெட் டி.ஜி9 கொண்ட 20,000 கல்வி அதிகாரிகளை நியமனத்திற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு திறக்கவிருக்கின்றது.
ஆர்-பி-என் எனப்படும் 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையிலான தேசிய கல்வித் திட்டத்தின் அமலாக்கம் மற்றும் அடுத்தாண்டு தொடங்கி ஆறு வயது மாணவர்கள் முதலாம் வகுப்பில் தன்னார்வ அடிப்படையில் சேர்க்கப்படவிருப்பதால், தொடக்கக்கட்ட முன்னேற்பாடாக அது அமைவதாக, கல்வி தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் அஸாம் ஆஹ்மட் கூறினார்.
அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்படும்.
கல்வி சேவை ஆணையத்துடன் இணைந்து ஏப்ரல் 27 முதல் மே 14-ஆம் தேதி வரை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு செயல்முறைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முஹமட் அஸாம் ஆஹ்மட் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கான திறன் அம்சங்கள் பராமரிக்கப்படுவதை உறுதிச்செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர் கல்வி கழகம், ஐ.பி.ஜி-இல் உள்ள பல்வேறு துறைகளில் சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய கல்வி தரத்தை மேம்படுத்துவதில் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான் உறுதிப்பாட்டை இம்முயற்சி பிரதிபலிப்பதாக, முஹமட் அஸாம் ஆஹ்மட் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)