ஜோகூர் பாரு, ஜனவரி 28 (பெர்னாமா) -- ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் மேவாவில் உள்ள ஏ.ஐ மகாபா பள்ளிவாசல் அருகே இருந்த புதரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மொத்தம் 18 வாகனங்கள் எரிந்து சேதமுற்றன.
இச்சம்பவம் குறித்து பிற்பகல் மணி 1.32க்கு கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து லார்க்கினைச் சேர்ந்த தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜோகூர் மாநிலத்தின் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை மையம் தெரிவித்தது.
பிற்பகல் மணி 1.45 அளவில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும் சுமார் 0.372 ஹெக்டேர் பரப்பளவிலான ஒரு புதரில் தீ பற்றி இருந்ததைக் கண்டறிந்தனர்.
இச்சம்பவத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 வாகனங்களும் பெருமளவில் சேதமுற்றதாக நடவடிக்கை மையம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில் ஹ்யுண்டாய் அதோஸ், பெரோடுவா கான்சில், நாசா ரியா, புரோட்டான் பெர்டானா, புரோட்டான் சவ்வி, பெரோடுவா கெலிசா, புரோட்டான் சாகா ஃப்.எல்.எக்ஸ் ஆகியவற்றுடன் ஒரு வேனும் 80 விழுக்காடு தீக்கிரையாகின.
இதைத் தவிர்த்து இதர ஐந்து வாகனங்களின் அடையாளம் கண்டறியப்படவில்லை.
இதைத் தவிர்த்து தீச்சம்பவத்தின் போது அருகில் இருந்த மற்ற வாகனங்களான புரோட்டான் சாகா, பி.எம்.டபிள்யூ இ60, புரோட்டான் இன்ஸ்பியரா, பெரோடுவா கெலிசா ஆகியவைச் சுமார் ஐந்து விழுக்காட்டு அளவே சேதமுற்றதாக அவ்வறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.
பிற்பகல் மணி 2.37க்குத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேளையில் மாலை மணி 5.20 தீ முற்றாக அணைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)