Ad Banner
 பொது

முன்கூட்டியே நேர்த்திக் கடன்; பக்த வெள்ளத்தில் பத்துமலை

25/01/2026 06:32 PM

பத்துமலை, 25 ஜனவரி (பெர்னாமா) --  தைப்பூசத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் கூட்டம், இன்று வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாக காணப்பட்டது.

தைப்பூசத்தின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி பலர் தங்களின் நேர்த்திக் கடன்களை முன்கூட்டியே செலுத்த தொடங்கி விட்டனர்.

காலையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பின்னர், பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த தொடங்கினர்.

வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி, நேற்றும் இன்றும் அதிகமான பக்தர்கள் காவடிகள் மற்றும் பால் குடங்களை ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தியதைக் காண முடிந்தது.

இந்நிலையில், கூட்ட நெரிசல், முதியவர்கள் மற்றும் பிள்ளைகளின் வசதி ஆகியவற்றை முன்னிறுத்தி முன்கூட்டியே தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றி விட்டதாக, சிலர் கூறினர்.

''தைப்பூச சமயத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, நிம்மதியாக கடவுளைத் தரிசிக்க முடியாது. மேலும், நாங்கள் ஜோகூரில் இருப்பதால் தைப்பூசம் தினத்தில் அங்குள்ள ஆலயத்திற்குச் சென்று நாங்கள் வழிப்படுவோம்'', என்று ஜோகூர் பாருவைச் சேர்ந்த நனுஷா சத்யாநந்தன் கூறினார்.

''தைப்பூசம் அன்று கூட்ட நெரிசலாக இருக்கும். மேலும், என்னுடைய அம்மா சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதால் அவரை அழைத்து வர முடியாது. எனவே, ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து தரிசனம் செய்வதன் மூலம் மனநிறைவாக இருக்கும்'', என்று சுங்கை பூலோவைச் சேர்ந்த நேசன் ராஜ் மகேந்திரன் கூறினார்.

அதோடு, பூச நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் தைப்பூசத்திற்கு முன்னதாகவே, பலர் நேர்த்திக் கடன் செலுத்துவது குறித்து சமய ஆர்வலர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வரும் வேளையில், பக்தர்கள் சிலர் இவ்வாறு பதிலளித்தனர்.

''என்னை பொருத்தவரை அது தவறு கிடையாது. ஏனென்றால், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும், வேலை காரணத்தினாலும் சிலர் முன்னதாகவே நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். அதுவாக இருந்தாலும், அது முருகருக்காக செலுத்துவது. அதனால் தவறில்லை'', என்றார் ஜோகூர் பாருவைச் சேர்ந்த ஹிராஷினி ஆறுமுகம்.

அதோடு, எவ்வித சிரமத்தையும் எதிர்நோக்காமல் நேர்த்திக் கடனை நிறைவுச் செய்ய வானிலையும் தங்களுக்குச் சாதமாக அமைந்ததாக அவர்கள் கூறினர்.

பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளையும் இன்று பத்துமலையில் காண முடிந்தது.

இதனிடையே, பக்தர்களின் கூட்டம் இன்றிரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)