சிலாங்கூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- புக்கிட் தகாரை மையமாகக் கொண்ட பன்றி வளர்ப்புத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பொருத்தமான வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அத்திட்டத்தின் அமலாக்கம் குறித்த கருத்துக்களைப் பெற, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியுடன் தாம் விவாதிக்கவிருப்பதாக அவர் கூறினார்.
''இவ்விவகாரத்தில், சுற்றுச்சூழல் பிரச்சனை, புதிய பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு இன மக்களின் பதற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். சிலாங்கூர் மந்திரி புசாருடன் நான் கலந்துரையாடி, முடிந்தால் கருத்தைத் தெரிவிக்கவும், முதலில் இத்திட்டத்தை ரத்து செய்து, முடிந்தால் தொழில்நுட்பம் உத்தரவாதம் அளிக்கும் என்ற நிபந்தனையுடன் சிறந்த பகுதியைப் பரிசீலிக்கவும் கேட்டுக் கொள்வேன். தொழில்நுட்பம் சிறந்ததாக இருந்தாலும், அச்சத்தையும் ஏற்படுத்தும் பகுதியில், அதைத் தொடர்வதும் பொருத்தமானதல்ல,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பண்டார் பாரு பாங்கியில் உள்ள சூராவ் அல் அமினில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர், அன்வார் அவ்வாறு கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்துடனான கலந்துரையாடல், சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் ஆலோசனையின்படியும், மக்கள் எழுப்பிய அச்சத்தின் அடிப்படையிலும் அமையும் என்றும் அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)