Ad Banner
 பொது

ஊழல் தொடர்பான அனைத்து ஏ.டி.எம், பி.டி.ஆர்.எம் கொள்முதல் முடிவுகளும் தற்காலிக முடக்கம்

16/01/2026 05:21 PM

கோலாலம்பூர், ஜனவரி 16 (பெர்னாமா) -- ஊழல் விவகாரங்களில் தொடர்புடைய மலேசிய இராணுவப் படை  ஏ.டி.எம், மற்றும் அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் ஆகியவற்றின் அனைத்து கொள்முதல் முடிவுகளும் கொள்முதல் செயல்முறை முழுமையாக பின்பற்றப்படும் வரையில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

நடப்பில் உள்ள செயல்முறையின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சின் மூலம் அரசாங்கம் அனைத்து கொள்முதலையும் மதிப்பாய்வு செய்து மறுசீரமைக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''தற்போதுள்ள கொள்முதல் முறையில் ஏதேனும் கசிவுகள், பலவீனங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க அறிக்கைக்காக நான் காத்திருப்பேன். ஏனென்றால், சில நேரங்களில் நாங்கள் 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வழங்குகிறோம். அது தற்காப்பு அமைச்சு உட்பட ஒவ்வொரு துறைக்கும் எளிதான வாய்ப்பாகும். எனவே, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

ஊழலை துடைத்தொழிப்பதில் விரிவான நடவடிக்கைகளைச் செயல்படுத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் தவிர உள்நாட்டு வருமான வரி வாரியம் எல்.ஹ்.டி.என்-னுக்கு அரசாங்கம் முழு சுதந்திரத்தையும் வழங்கியிருப்பதாகவும் அவர் விவரித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் ஊழல் விவகாரத்தை எளிதாக எடுத்துக் கொள்பவர்கள் இன்னும் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இன்று, வங்சா மாஜு-வில் உசாமா பின் ஜைத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)