Ad Banner
 பொது

ஏ.ஐ மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் - ரமணன்

15/01/2026 08:54 PM

புத்ராஜெயா, ஜனவரி 15 (பெர்னாமா) -- செயற்கை நுண்ணறிவு AI பயன்பாடு உட்பட இலக்கவியல் மயமாக்குதல் மூலம் விரிவான தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை சமூக பாதுகாப்பு அமைப்பு, PERKESO தீவிரப்படுத்தி வருகிறது.

நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடியே 70 லட்சம் தொழிலாளர்களின் செயல்முறைகளை எளிதாக்கக்கூடிய ஒருங்கிணைந்த மையம் அல்லது தளத்தை உருவாக்குவதும் இம்முயற்சியில் அடங்கும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் மாதந்திர சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இத்தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Gig எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதாரத் துறை ஊழியர்களின் சவால்களை கையாள்வது உட்பட இவ்வாண்டு கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும் 2025ஆம் ஆண்டு Gig ஊழியர்கள் சட்டம், உட்பிரிவு 872-இல் அமைச்சு முக்கிய கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி அரசாங்கத்தின் அனுமதி பெற்றப் பின்னர், 872 சட்டம் டிசம்பர் 31-ஆம் தேதி அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

நாட்டில் உள்ள சுமார் 12 லட்சம் gig ஊழியர்களுக்கு இச்சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)