ஜாலான் பிராயுன், 14 ஜனவரி (பெர்னாமா) -- சரவாக், ஶ்ரீ அமான்-இல் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியரும் அவரின் மனைவியும், ஜாலான் பிராயுன்-இல் உள்ள தங்கள் இல்லத்தில் இன்று அதிகாலை உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.
காலை மணி 6.55 அளவில் அத்தம்பதியினர் சுயநினைவின்றி காணப்பட்டது, பொதுமக்கள் அளித்தத் தகவலின் அடிப்படையில் தங்கள் தரப்பிற்கு தெரிய வந்ததாக, சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ முஹமட் ஸைனால் அப்துல்லா தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஶ்ரீ அமான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து போலீஸ் படையினரும் ஶ்ரீ அமான் மருத்துவமனையிலிருந்து மருத்துவ அதிகாரியும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ முஹமட் ஸைனால் அப்துல்லா கூறினார்.
45 வயதுடைய அவ்வாடவரும் 44 வயதுடைய அவரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் உறுதியானது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
இச்சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் இது குறித்த தகவல் அறிந்தவர்கள் விசாரணை அதிகாரியை 019-331 7785 என்ற எண்ணிலோ அல்லது Sri Aman மாவட்ட போலீஸ் தலைமையகத்தையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)