Ad Banner
 பொது

5 கோடி ரிங்கிட் மூலம் பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகள் பயனடையும்

07/01/2026 08:31 PM

ஜார்ஜ்டவுன், 07 ஜனவரி (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பழுதுபார்ப்பு பணிகளுக்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த ஐந்து கோடி ரிங்கிட் நிதி ஒத்துக்கீட்டின் மூலம் பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

2008-ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டு வரும் மாநில நடைமுறையின் அடிப்படையில் பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப இந்நிதி செலவிடப்படுமே தவிர அது ரொக்கமாக வழங்கப்படாது என்று, அம்மாநில முதலமைச்சர் சௌ கொன் யாவ் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் உட்பட கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கு நீண்ட காலமாக உதவி தேவைப்படும் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளுக்கு இந்நிதி பேருதவியாக அமையும் என்று சௌ கூறினார். 

நாட்டின் கல்வி முறையில் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உள்ள இந்நிதி ஒதுக்கீடு, இந்திய சமூகத்திற்கு அதிக அர்த்தத்தைக் கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

''2008-ஆம் ஆண்டிலிருந்து பினாங்கின் அனுபவத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழ்ப்பள்ளிகளுக்கு உண்மையில் உதவி தேவை என்பதை நாங்கள் கவனித்துள்ளோம். இந்த ஒதுக்கீடு நிச்சயமாக ஒவ்வொரு பள்ளிக்கும் உதவும்,'' என்றார் அவர். 

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் நேற்றிரவு, 2025 உலக எந்திரனியல் விளையாட்டுப் போட்டி, WRG-இல் வெற்றி பெற்ற மலேசிய மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினர். 

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எஸ். சுந்தரராஜூ, பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றிற்கான நில உரிமைகள் இன்னும் நிலுவையில் இருந்து வருவதாக விவரித்தார். 

எனவே, அதற்கான தீர்வைக் காணும் நடவடிக்கையில் மாநில அரசாங்கம் முழுமையாக ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். 

''மற்றவர்கள் இடத்தில் இருந்தால் ஒரு காலக்கட்டத்தில் வெளியேற்றப்படும் சூழல் உண்டாகும். அதனை நிலைநிறுத்த அதிக முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அடுத்தக்கட்டமாக பினாங்கில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிலத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுகிறோம். அது வெற்றியடைந்தால், அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நில உரிமை உள்ள முதல் மாநிலமாக பினாங்கு திகழும்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, தோட்டத் தமிழ்ப்பள்ளிகளாக அடையாளம் காணப்படும், சில தமிழ்ப்பள்ளிகளின் பெயரின் முன் அந்த தோட்டம் என்ற அடையாளம் நிலைநிறுத்தப்படுமா என்ற கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது. 

''தோட்டம் என்கிற பெயர் ஓர் அடையாளம். தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் உருவானது தோட்டப்புறத்தில்தான். அது வரலாறு. ஆனால், தற்போது தோட்டப்புறங்களில் இருந்து வெளியேறி சமுதாயம் அதிகமாக எங்கு சென்றுள்ளதோ அங்கேயே அந்ததந்த தமிழ்ப்பள்ளிகளை அமைக்கவுள்ளோம்,'' என்றார் அவர்.

மேம்பாட்டுப் பணிகளுக்காக சீனப் பள்ளிகளின் ஒதுக்கீட்டை எட்டு கோடி ரிங்கிட்டாக அதிகரிப்பதோடு, தமிழ்ப்பள்ளிகளுக்கு ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டையும் பிரதமர் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]