புத்ராஜெயா, ஜனவரி 07 (பெர்னாமா) -- எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தீபகற்பத்தில் செயல்பட தொடங்கும் நகரும் தொழிலாளர் நீதிமன்றம் பின்னர் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
புறநகர் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு அணுகலை எளிதாக்கும் வகையில், மூன்று நீதிமன்றங்களுக்கான முன்னோடித் திட்டத்திற்கு 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
''நகர்புறத்தில் தொழிலாளர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான பல இடங்களும் அணுகலும் ஏற்கனவே உள்ளன. ஆனால் புறநகர் பகுதிகளில், அது அவர்களுக்கு நிறைய சிரமங்களை உள்ளடக்கியிருக்கிறது. அவர்கள் வெளியே செல்வதற்கும், நீதிமன்றத்திற்கு வருவதற்கும் ஆகும் செலவு, செலவிடும் நேரம் போன்றவை. எனவே அந்த அனைத்து சிக்கல்களையும் குறைக்க, நாங்கள் இதைச் செய்துள்ளோம்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் தீபகற்ப மலேசிய மனிதவளத் துறையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ரமணன் அவ்வாறு கூறினார்.
வழக்கு விசாரணைப் பதிவு முறையை இலக்கவியல் மயமாக்குவதன் மூலம் தொழிலாளர் நீதிமன்றம், மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு மேலும் ஆறு தொழிலாளர் நீதிமன்றங்களில் இலக்கவியல் பதிவு அமைப்புகளுடன் பொருத்தப்படும் என்றும் அதற்காக 18 லட்சம் நிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ரமணன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)