ஃபுளோரிடா, 05 ஜனவரி (பெர்னாமா) -- வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து உலகளாவிய முதலீட்டாளர்கள் புதிய புவிசார் அரசியல் அபாயங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நடவடிக்கை, வெனிசுலாவின் பெரும் எண்ணெய் கையிருப்புகளை மீண்டும் திறக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் வேளையில் நீண்டகால முதலீட்டு சொத்துகளுக்கு ஆதரவாக அமையலாம்.
ஆயினும், வர்த்தக சந்தையில் அது தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
வெனிசுலா தொடர்பான அரசியல் மாற்றங்கள் இருந்தபோதிலும் உலக சந்தைகள் அதற்குப் பெரிதாகப் பதிலளிக்கவில்லை.
இன்று பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்ட வேளையில் எண்ணெய் விலைகள் மிதமாகவும், தங்க விலைக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டை அமெரிக்கா தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அரசாங்கத்தை நடத்துவதாகவும், தேர்தலில் மோசடிகள் செய்ததாகவும் பல முறை குற்றம் சாடப்பட்ட நிக்கோலஸ் மடுரோ, நியூ யார்க்கின் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
1989-ஆம் ஆண்டு பனாமா படையெடுப்பிற்குப் பின்னர் லத்தீன் அமெரிக்காவில் வாஷிங்டன் நேரடியாக தலையிடவில்லை.
பாதுகாப்பான, நியாயமான மற்றும் விவேகமான மாற்றத்திற்கு சரியான நேரம் வரும் வரை அமெரிக்கா வெனிசுலாவை ஆளும் என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.
அது எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது குறித்து சில விவரங்களை மட்டுமே கொடுத்த அவர் அமெரிக்க படைகளை அனுப்புவதிலிருந்து பின்வாங்கவில்லை.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]