கோலாலம்பூர், ஜனவரி 04 (பெர்னாமா) -- கடந்த ஆண்டு செப்டம்பரில் இல்லாத கிரிப்டோ பண முதலீட்டு மோசடி கும்பலிடம் ஏமாந்து மருத்துவ நிபுணர் ஒருவர் ஐந்து லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் இழப்பை எதிர்நோக்கியதைப் போலீசார் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட 67 வயதுடைய அந்த ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் புகார் அளித்ததாகப் பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் பாதிக்கப்பட்டவருக்கு டிக்டோக்கில் வழி தொடர்பில் இருந்த ஒருவரிடமிருந்து முதலீட்டு இணைப்பு கிடைத்தது போலீசாரின் தொடக்கக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகச் சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ நோர் ஹிசாம் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு லாபத்தையும் அவர் பெறவில்லை.
சிறிது நேரத்திற்குப் பின்னர், அந்நபர் தாம் எதிர்நோக்கிய மோசடிப் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதாகக் கூறிய ஒரு நிறுவனத்தைப் பற்றி முகநூலில் படித்து அதில் தன்னை வழக்கறிஞர் என்று கூறிக் கொண்ட ஒரு நபருக்கு இப்பிரச்சனைக்குத் தீர்வுக் காண கட்டணமாக மேலும் இரண்டு லட்சத்து 9,200 ரிங்கிட்டைச் செலுத்தியுள்ளார்.
இதனால் மொத்தம் அவர் ஐந்து லட்சத்து 29,200 ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 420இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)