சிப்பாங், ஜனவரி 01 (பெர்னாமா) -- 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டுக்கான தயார்நிலை பணிகளுக்கு ஏற்ப அனைத்துலக சுற்றுப்பயணிகளை வரவேற்பதில் நட்புணர்வையும் விருந்தோம்பல் கலாச்சாரத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்பிரச்சாரத்தை வெற்றிபெறச் செய்யும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ள நிலையில் சுற்றுப்புற தூய்மையைப் பாதுகாப்பது உட்பட சிறந்த முன்மாதிரியாக மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
சுற்றுப்பயணிகளுக்கு உதவுவதில் அதாவது அவர்கள் ஏதேனும் கேள்விகள் கேட்கும்போது நன்முறையில் பதில் கூறாமலும் நட்பாக நடந்து கொள்ளாமலும் இன்னும் சிலர் இருப்பது குறித்து தங்கள் தரப்பு புகார்கள் பெறுவதை தியோங் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுப்பயணிகளை வரவேற்கும் நாடாக மலேசியா அறியப்பட வேண்டும் என்று தியோங் கூறினார்.
''எனவே, நேற்று நான் சென்றிருந்தேன். எனக்கு ஒரு புகார் வந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இதில் ஈடுபடச் சொன்னேன். சுற்றுப்பயணிகள் கேட்கும்போது மக்கள் நட்பாக இல்லை. மேலும் அவர்கள் கோபமடைந்தனர் என்றார்கள். எனவே, நான் அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். நமது நாடு நட்பான ஒரு நாடு என்பதை நிரூபிக்க ஒன்று சேர்வோம். பின்னர், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுப்பயணிகளை நாங்கள் வரவேற்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும்'', என்றார் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்.
VM2026 பிரச்சாரத் தொடக்கத்தின் ஓர் அங்கமாக இன்று சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ முனையம் ஒன்றில் அனைத்துலக சுற்றுப்பயணிகளை வரவேற்றப் பின்னர் தியோங் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)