பத்துமலை , ஜனவரி 01 (பெர்னாமா) -- சிலாங்கூர், பத்துமலை திருத்தலத்தில் 140 அடி முருகப் பெருமான் சிலையின் 10ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
புதுபிப்பு மற்றும் சாயம் பூசும் பணிகளுக்குப் பின்னர், புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் முருகனுக்கு முதல் முறையாக ஆளில்லா விமானம் வாயிலாக பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
முருகப் பெருமானுக்கு பன்னீரைத் தெளிப்பதற்கும் அவரை தரிசிப்பதற்கும் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் திரண்டனர்.
காலை ஏழு மணிக்கு தொடங்கிய சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், முருகப் பெருமானுக்கு பிரம்மாண்டமாக ஆரத்தி எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காலை மணி ஒன்பது அளவில் அதிகாரப்பூர்வமாக அபிஷேக விழா தொடங்கியது.
புத்தாண்டைத் தொடர்ந்து முருகப் பெருமானின் சிலை கட்டப்பட்டு 20ஆம் ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், இது மாபெரும் பெருவிழாவாக அமைந்திருப்பதாக கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு அதிகமான பக்தர்கள் இந்த அபிஷேக விழாவிற்கு வருகைப் புரிந்திருப்பதாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்தார்.
இதனிடையே, இவ்விழாவில் முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதற்கு கலந்து கொண்ட பக்தர்கள் சிலர் தங்களின் அனுபவங்களையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும் பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டர்.
முருகன் சிலையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தருணங்களையும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.
இதனிடையே, பிற்பகல் மணி 12 அளவில் மழை பெய்யத் தொடங்கியதால் பக்தர்களுக்கு சற்று இடையூறு ஏற்பட்டது.
மாலை மணி 4.30 மணிக்கு மேல், மக்களுக்காக கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)