Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

2025 ஒரு கண்ணோட்டம்: ஆசியான் தலைமை

27/12/2025 01:40 PM

கோலாலம்பூர், டிசம்பர் 27 (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை தலைமையேற்று நடத்தி, மலேசியா அனைத்துலக கவனத்தை ஈர்த்தது.

47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடர்புடைய பல கூட்டங்கள் இவ்வாண்டின் பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்டாலும், அக்டோபர் 26 தொடங்கி 28-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற்ற உச்சநிலை மாநாடு, உலக நாடுகளை மலேசியா பக்கம் திருப்பியது.

வர்த்தகம் மற்றும் விநியோகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முதல், வட்டார பாதுகாப்பின் கட்டமைப்பு, கூட்டமைப்பின் விரிவாக்கம் வரை பல முக்கிய தலைப்புகள் குறித்து மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் கலந்துரையாடினர்.

47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, ஆசியானின் உறுப்பு நாடுகளில் திமொர் லெஸ்தே உறுப்பியம் பெற்றது.

நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர், ஆசியானில் இணைந்திருக்கும் திமொர் லெஸ்தேவுக்கு, உறுப்பு நாடுகள் வழி பல நன்மைகள் கிட்டும் என்று அதன் பிரதமர் கே ராலா சனானா குஸ்மாவோ தெரிவித்தார்.

47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் முக்கியத்துவம் பெற்றார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்க, அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை காலாச்சார படைப்பில் டிரம்ப் ஈர்க்கப்பட்டார்.

உள்நாட்டு கலைஞர்கள் வாசித்த இசைக்கு அவர் உடல் அசைத்தது, உலக அளவில் பேசும் பொருளாக மாறியது.

அதனை தொடர்ந்து, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும் டிரம்ப் கலந்து கொண்டார்.

இந்த அமைதி ஒப்பந்தம் வழி, தாய்லாந்து - கம்போடியா எல்லை மோதல் நிறுத்தப்பட்டாலும், சில காலத்திற்கு பிறகு, அவ்வரு நாடுகளும் மீண்டும் சண்டையிட்டு வருகின்றன.

மலேசியாவும் அமெரிக்காவும் இறுதி செய்த வர்த்தக ஒப்பந்தமும், 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் முக்கியத்தும் பெற்றது.

இதன் வழி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மலேசிய பொருள்களுக்கு 19 விழுக்காடு வரியை விதிக்க அமெரிக்க ஒப்புக் கொண்டது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் மலேசியாவின் வர்த்தக நிலைத்தன்மையை வலுப்படுத்தும் என்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும் என்றும் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை முன்னாள் அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்திருந்தார்.

பல முக்கிய விவாதங்கள் மற்றும் பயனுள்ள உரையாடல்களுக்குப் பின்னர் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு நிறைவுற்ற நிலையில், 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தும் பொறுப்பு அதிகாரப்பூர்வமாக பிலிப்பைன்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது

2026-ஆம் ஆண்டில் ஆசியானுக்கு தலைமையேற்கவிருக்கும் பிலிப்பைன்ஸ்க்கு, அதன் அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரிடம் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ரஹைம் தலைமைச் சின்னத்தை ஒப்படைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)