கோலாலம்பூர், டிசம்பர் 22 (பெர்னாமா) -- மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பின் வழி, தனது தண்டனைக் காலம் முடியும் வரையில், அந்த முன்னாள் பிரதமர் எஞ்சிய தண்டனையை காஜாங் சிறையிலேயே கழிப்பார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வாதங்களை ஆராய்ந்து, தீர்ப்புக்கான காரணங்களை வாசித்த பின்னர், நீதிபதி எலீஸ் லோக் யீ சிங் அம்முடிவை அறிவித்தார்.
முன்னதாக, தமது விண்ணப்பத்தின் முடிவை செவிமடுக்க, டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், காஜாங் சிறையிலிருந்து காலை மணி 8.40 அளவில், SUV ரக வாகனத்தில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.
தமது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு இருப்பது தொடர்பான நீதித்துறை மறுஆய்வுக்கான விண்ணப்பத்தை நஜீப் செய்திருந்தார்.
அவருக்கு ஆதரவாக மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோரும், மகன் டத்தோ முஹமட் நிசார்-ரும் நீதிமன்றத்திற்கு வருகைப் புரிந்திருந்தனர்.
அதோடு, நஜீப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
சொந்தமான நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி, நஜிப் காஜாங் சிறையில் தண்டனயை அனுபவித்து வருகிறார்.
இதனிடையே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமது தரப்பு மேல்முறையீடு செய்யும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முஹமட் ஷாஃபீ அப்துல்லா தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)