கோலாலம்பூர், டிசம்பர் 21 (பெர்னாமா) -- வடகிழக்கு இந்தியாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை டெல்லி நோக்கிச் சென்ற ரயில் ஒரு யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் ஏழு யானைகள் உயிரிழந்தன.
மேலும், ஒரு யானை காயமடைந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் வி.வி. ராகேஷ் ரெட்டி தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டத்தில் யானை வழித்தடம் இல்லாத இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யானைக் கூட்டத்தைக் கண்டதும் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் யானைகள் ரயிலை நோக்கி விரைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த யானைகளுக்குக் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டதோடு அவை பிற்பகலில் அடக்கம் செய்யப்பட்டன.
இவ்விபத்தில் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன.
எனினும் அதில் பயணித்த யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்தப் பகுதி வழியாகச் செல்ல திட்டமிடப்பட்ட ரயில்கள் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதோடு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வேகமாக வரும் ரயில்கள் காட்டு யானைகளை மோதுவது அசாமில் வழக்கமான ஒன்றாகும்.
அங்கு சுமார் 7,000 காட்டு ஆசிய யானைகள் உள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)