கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் காலமானதை அடுத்து அவர் உறுப்பினராக இருந்த கினபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றம் ஆகியவை காலியாகியிருப்பது, மலேசிய தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர்-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துலிடம் இருந்தும், இன்று, சபா சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஶ்ரீ கட்சிம் எம். யாஹ்யாவிடம் இருந்தும் இது தொடர்பிலான அறிவிக்கைகளைப் பெற்றதாக அவ்வாணையம் அறிவித்துள்ளது.
அவ்விரு தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான தேதிகள் மற்றும் இதர விவரங்கள் குறித்து வரும் டிசம்பர் 16-ஆம் தேதி சிறப்பு கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று அதன் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இட்ருஸ் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அச்சிறப்புக் கூட்டம் நிறைவடைந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் ஒன்றும் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடந்து முடிந்த சபா மாநிலத் தேர்தலில், லாமாக் தொகுதியில் ஆறு முனைப் போட்டியை எதிர்கொண்ட அம்மாநில தேசிய முன்னணி தலைவருமான 66 வயது புங் மொக்தார் 153 வாக்குகள் பெரும்பான்மையில் தமது தொகுதியைத் தற்காத்தார்.
அதன் பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை கோத்தா கினபாலுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]