Ad Banner
Ad Banner
 உலகம்

''எங்களை தற்காக்கவே எதிர்தாக்குதல் நடத்தப்படுகிறது'' - கம்போடியா

09/12/2025 04:34 PM

கம்போடியா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்து - கம்போடியா இடையே மீண்டும் நிலவிய மோதலை அடுத்து தங்கள் நாட்டின் தற்காப்புக்காக எதிர்தாக்குதலை நடத்த வேண்டிய கட்டாயம் நிலவியதாக கம்போடிய முன்னாள் பிரதமர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

போர் நிறுத்தத்தை மதிக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பொறுமை காத்ததையும், நாட்டு மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுவதற்கு அவகாசம் தேவைப்பட்டதையும் அடுத்து நேற்று மாலை தொடங்கி தாங்கள் எதிர்தாக்குதல்களை நடத்துவதாக தற்போதைய பிரதமர் ஹன் மனெட்டின் தந்தை ஹன் சென் தெரிவித்தார். 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தராக இருந்து கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்தம் மீறப்பட்டதை அடுத்து, இராணுவத் திறனை முடக்கும் முயற்சியாக கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

இம்மோதலில், தாய்லாந்து இராணுவ வீரர் ஒருவர் மற்றும் கம்போடிய பொதுமக்கள் நால்வர் கொல்லப்பட்டதற்கு, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

சிசக்கெட் எல்லைக்கு அருகே கண்ணிவெடி வெடிப்பில் தாய்லாந்து வீரர்கள் இருவர் காயமடைந்ததை அடுத்து கம்போடியா உடனான அமைதி ஒப்பந்த செயல்பாட்டை தாய்லாந்து நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதம் நடந்த சண்டைக்குப் பிறகு ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமைந்தது.

இச்சம்பவத்தில் இரு நாடுகளிலும் குறைந்தது 43 பேர் உயிரிழந்த வேளையில் 300,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]