Ad Banner
Ad Banner
 பொது

கைத்தொழிலின் மூலம் வாழ்க்கையை உயர்த்தும் மைஸ்கில்ஸ்

04/12/2025 07:36 PM

கோலாலம்பூர், 4 டிசம்பர் (பெர்னாமா) -- கல்வியில் பின்தங்கிய பதின்ம வயது மாணவர்களுக்கு கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கும் முயற்சியில் மீண்டும் வெற்றியடைந்துள்ளது மைஸ்கில்ஸ் அறவாரியம்.

சோலார் பி.வி, இ.வி ஸ்கில்ஸ் போன்ற கைத்திறன் பயிற்சிகளைக் கடந்த ஓராண்டு காலமாக அந்த அறவாரியத்தில் பயின்று வரும் மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் இன்று அந்த அறவாரியம் 100 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது.

கைத்தொழில் கற்பதன் வழி அம்மாணவர்கள் அதிகமான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் முதற்கட்ட முயற்சியாக அவர்களுக்கு இப்பயிற்சியை தமது தரப்பு வழங்கியதாக மைஸ்கில்ஸ் அறவாரிய இயக்குநர், டாக்டர் சண்முக சிவா பகிர்ந்து கொண்டார்.

''அவர்கள் அனைவரும் சுயமாக வேலை செய்ய வேண்டும். அவர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும். அதுவே எங்களின் ஒரே நோக்கம். அதனை நாங்கள் மிகச் சிறப்பாக செய்து வருகிறோம். எங்களிடம் நிறைய இந்திய மாணவர்கள் வந்து சேர்கின்றனர். அவரவருக்கு தேவையான கல்வியை நாங்கள் வழங்குகிறோம். எம்மாதிரியான தொழில்களின் வாயிலாக அவர்கள் நிறைந்த வருமான பெற முடியுமோ அதற்கேற்ற பயிற்சிகளையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம். கல்வியையும் தாண்டி அவர்களை நல்ல குணம் படைத்தவர்களாகவும், சமூகத்திற்கு சேவை செய்யும் மக்களாகவும் அவர்களை நாங்கள் மாற்றுகிறோம்,'' என டாக்டர் சண்முக சிவா கூறினார்.

பண வர்த்தனையில் மட்டுமின்றி சமூக கடப்பாட்டிலும் சிறந்து விளங்கும் எச்.எஸ்.பி.சி வங்கி ஏழாவது ஆண்டாக மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இம்முயற்சிக்கு நிதி உதவி வழங்கி ஆராதரவு அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஓராண்டு காலத்தில் மாணவர்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகள் மற்றும் இத்தகைய பயிற்சிக்கு பின்னர் மாணவர்களின் வளர்ச்சி நிலை குறித்து விவரிக்கிறார் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் மற்றோர் இயக்குநரான வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம்.

''சோலார் பி.வி, இ.வி கில்ஸ் ஆகிய கல்வித்திறன் தற்போது செயல் முறைக்கு வந்திருக்கும் புதிய தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பத்தை பற்றிய அறிமுகத்தை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் இதில் கிடைத்த அனுபவத்தை வேறு துறைக்கு சென்றாலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிச்சயம் அமையும். மைஸ்கில்ஸ்-இல் பயிலும் மாணவர்கள் இது மட்டுமல்லாது மின்னணு மற்றும் மின்சாரம், வயரிங், தொழிற்துறை சார்ந்த பயிற்சிகளிலும் பயின்று வருகிறார்கள்,'' என்றார் பசுபதி சிதம்பரம்.

இதனிடையே, நற்சான்றிதழை பெற்றுக் கொண்ட மாணவர்களில் சிலர் இத்துறையில் தாங்கள் எதிர்நோக்கிய சவால்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

''ஆரம்பத்தில் எங்களுக்கு கடனமாக இருந்தது. குறிப்பாக கணிதம். எனக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே கணிதம் கற்க வராது. அதிலும் மின்னணு மற்றும் மின்சாரம் பற்றிய கணக்குகளை புரிந்துக் கொள்ள எனக்கு நீண்ட காலம் எடுத்தது. கற்றதை செயல்பாட்டிற்கு கொண்டு வர இன்னும் சிரமமாக இருந்தது. இரண்டு வருட பயிற்ச்சிக்கு பிறகு, ஒரு வீட்டின் மின்னனு வேலைகளை என்னால் சுயமாகச் செய்ய முடியும்,'' என்றார் யுவசங்கரன் தேவராஜா. 

''இன்றைக்கு எனக்கு சோலார் பி.வி சான்றிதழ் கிடைத்தது. இதனை பெற நான் சில சவால்களை சந்தித்துள்ளேன். நான் தொழிற்துறை சார்ந்த பயிற்சியில் பயின்றதால் எனக்கு இந்த ஒரு வருட பயணம் சற்று கடினமாகவே இருந்தது. நான் முழு உழைப்போடு அயராது உழைத்து, எல்லா வகுப்புகளுக்கும் சென்று இப்போது இந்நிலையை எட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார் பவித்ரா சிவகுமார். 

''நான் மைஸ்கில்ஸ்-இல் இரண்டு வருடம் பயிற்சி பெற்றுள்ளேன். ஒன்றாம் மற்றும் இரண்டாம் நிலையை முடித்து இப்போது இந்த சான்றிதழை பெறுவதில் பெருமை கொள்கிறேன். என்னுடய எதிர்கால தொழிலை நல்ல வழியிம் நிர்ணயிப்பதற்கு மைஸ்கில்ஸ் தான் காரணம்,'' என்றார்  தினாயகரன் சுப்ரமணியம். 

இன்று, கோலாலம்பூரில் உள்ள ரோயல் சிலாங்கூர் க்லப்-இல் நடைப்பெற்ற மைஸ்கில்ஸ் சாதனை விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின், தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ டாக்டர் நகுலேந்திரன் கங்கயற்கரசு சிறப்பு வருகை புரிந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)