கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- தொலை மருத்துவ ஆலோசனை வழங்குநர்கள் மூலம் எம்.சி எனப்படும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதை மலேசிய மருத்துவ மன்றம், எம்.எம்.சி அண்மையில் தடை செய்தது.
பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மருத்துவ பயிற்சியாளரும் தங்கள் தொழில்முறை பொறுப்புகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான முக்கிய நினைவூட்டல் இதுவென்று மலேசிய மருத்துவச் சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் இலக்கவியல் வணிகத் தளங்களால் சுகாதார சேவையின் விநியோகம் அதிகரித்து வருவதோடு, இச்சேவையில் மருத்துவர் அல்லாதவர்களின் தலையீடு பெரும் கவலையை அளித்து வந்த நிலையில், எம்.எம்.சி இத்தடையை விதித்துள்ளதாக டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு கூறினார்.
மருத்துவம் அல்லாத நிர்வாகிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் மருத்துவச் செலவைச் கட்டுப்படுத்தும் மூன்றாம் தரப்பினர் போன்ற, தொலை மருத்துவ ஆலோசனை வழங்குநர்களால் மருத்துவ முடிவுகளும் மருத்துவச் சான்றிதழ்களும் தற்போது அதிகளவில் நிர்வகிக்கப்படுவதாக அவர் விவரித்தார்.
''Duty of care என்பது மருத்துவர் ஒருவர் உங்களை முறையாகப் பரிசோதிப்பதாகும். ஒருவருக்குக் கண்டிருக்கும் நோய்க்கான அறிகுறிகள் குறித்து கேள்விகளைக் கேட்டு அதற்கேற்ற பரிசோதனையை செய்து பின்னர் மருந்துகளை கொடுப்பார். ஆனால், இந்த தொலை மருத்துவ ஆலோசனை வழங்குநர்கள் இந்த அனைத்துச் செயல்முறைகளையும் தவிர்த்து விடுவர். பின்னர், மருந்துகளையும் மருத்துவ சான்றிதழையும் வழங்குவர். இது முறையற்ற செயல்,'' என்றார் அவர்.
மருத்துவ சேவை நிச்சயம் ஒரு வர்த்தகமல்ல.
எனவே, அலட்சியம், நெறிமுறையற்ற நடைமுறைகள், மருத்துவ முடிவுகளில் மருத்துவம் சாராத தலையீடு, ஆவணங்களை போலியாக்குதல் அல்லது நோயாளியின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் சமரசம் செய்ய முடியாதவை என்று டாக்டர் திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.
''சுகாதாரம் ஒரு வர்த்தகமல்ல. அதிகமான வர்த்தக நிறுவனங்கள் தொலை மருத்துவ ஆலோசனை வழங்குநர்களை நாடுகின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதாலும் எளிய முறையில் இருப்பதாலும் அத்தரப்பினர் அவ்வாறு செய்கின்றனர். இது தவறு,'' என்றார் அவர்.
இவ்வேளையில், சுயாதீனமான மருத்துவ தீர்ப்பையும், போலியற்ற ஆவணங்களை உறுதி செய்யவும், குறிப்பாக தொலை மருத்துவ ஆலோசனை வழங்குநர்கள் அல்லது காப்புறுதி நிறுவனங்களால் இயக்கப்படும் சிகிச்சை மாதிரிகளில் அலட்சியம் கொள்ள வேண்டாம் என்றும் மருத்துவ பயிற்சியாளர்கள் குறிப்பாக தனியார் துறை மருத்துவர்கள் அனைவருக்கும் எம்.எம்.ஏ நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
''தனியார் துறை அரசாங்கத் துறைக்கு உதவிகளை வழங்குகிறது. இந்நிலையில், அதனை வர்த்தகக் கண்ணோட்டத்தில் பார்த்து தவறாகப் பயன்படுத்தக்கூடாது. மருத்துவத்தில் புத்தாக்கம் என்பது மிக முக்கியம். ஆனால், நோயாளிகளின் நலனில் அக்கறை கொள்ளாமல் வர்த்தகத்திற்காகச் செய்யக்கூடாது,'' என்றார் அவர்.
தொலை மருத்துவ ஆலோசனை வழங்குநர்கள் மூலம் MC பெறுவதை எம்.எம்.சி அண்மையில் தடைசெய்தது தொடர்பில் பெர்னாமா தொடர்பு கொண்டபோது டாக்டர் திருநாவுக்கரசு அவ்வாறு கருத்துரைத்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]