பிரேசில், 16 நவம்பர் (பெர்னாமா) -- பருவநிலை மாற்றத்தினால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவது குறித்த ஆழமான விவாதத்தை மேற்கொள்ளும் நோக்கத்துடன், COP30 எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் 30-வது பருவநிலை மாற்ற மாநாடு நவம்பர் பத்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
பிரேசில், பெலேமில் நவம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில், 190-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த 56,000-க்கும் அதிகமான பேராளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், நாட்டின் கடப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மலேசியப் பவிலியோனும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது
பெரும்பாலும், மனிதர்களின் நடவடிக்கைகளினாலேயே உலகளவில் பருவநிலை மாற்றம் நிகழும் நிலையில், இது, உடல், உள ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிப்பதோடு உலக பொருளாதாரத்திலும் சுணக்கத்தை ஏற்படுத்துவதாக, மலேசியாவை பிரதிநிதித்து COP30 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, என்.ஆர்.ஈ.எஸ்-இன் தேசிய ஆலோசக குழு உறுப்பினர், மோகேஷ் சபாபதி தெரிவித்தார்.
''திடீர் வெள்ளம், அதீத வெப்பநிலை போன்ற பருவநிலை மாற்றங்கள் அதிகமாக நிகழ்கின்றன. மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, தேசிய பொருளாதாரத்தில் சுமார் 20 விழுக்காட்டு பாதிப்பு இந்த பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகின்றது,'' என்றார் மோகேஷ் சபாபதி.
அதேவேளையில், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மலேசியாவை தற்காக்கும் வகையில் நாடு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மோகேஷ் விவரித்தார்.
இம்மாநாட்டின் மூலம், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இதர நாடுகளுடனான ஒத்துழைப்பு முயற்சியையும் மலேசிய முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
''அண்மையில், நமது தோட்டத் தொழில்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் நாட்டின் வனப்பகுதி 54 விழுக்காடு பராமரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன்வழி, மலேசியாவின் பருவநிலை மாற்ற அடைவுநிலை 2050-க்குள் அடையப்படலாம்,'' என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, நெல் பயிரீடு, செம்பனை எண்ணெய் உற்பத்தி உட்பட கடல் உணவுகள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மலேசியா, உணவு பாதுகாப்பிற்கும், இந்த COP30 மாநாட்டின் மூலம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மோகேஷ் கருத்துரைத்தார்.
ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தினால் அத்தொழில் துறைகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பருவநிலை மாற்றத்தைக் கையாள அரசாங்கம் மட்டுமின்றி, ஒவ்வொரு தனிநபரும் பொறுப்பேற்க வேண்டும் என்று மோகேஷ் வலியுறுத்தினார்.
பருவநிலை மாற்றத்தைக் கையாளும் வகையில் மலேசியா உட்பட உலக நாடுகள் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து, மோகேஷ் பெர்னாமாவிடம் பேசினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)