கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- வியாழக்கிழமை நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு அமைப்பு பெர்கெசோவின் iLINDUNGu விருது விழாவில் மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா ஐந்து விருதுகளை வென்றது.
பெர்கெசோவின் செயல்பாடுகளில் விரிவாக்கம், குறிப்பாக சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் பங்களிப்பாளர்களாக தொழிலாளர்களில் உரிமைகள் தொடர்பான செய்திகளை முன்னிலைப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கத்தில் இரண்டாவது முறையாக இந்த விருதளிப்பு நடத்தப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்தீவன் சிம் தெரிவித்தார்.
“Strok Bukan Noktah: Azli Bangkit Kembali Bersama RTW Perkeso” எனும் தலைப்பிலான செய்திக்காக, கிளந்தான் மாநில பெர்னாமா பணியகத்தின் தலைவர் முஹமட் அபிக் முஹமட் அஸ்ரி சிறந்த அகப்பக்க செய்தி எனும் பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, “Perkeso, Benteng Perlindungan Pekerja Gig, Imbang Risiko Ekonomi Baharu” எனும் தலைப்பிலான செய்திக்காக, கிளந்தான் மாநில பெர்னாமா நிருபர் முஹமட் நூர் இக்ராம் ரோஸ்லி சிறந்த தொலைக்காட்சி செய்தி பிரிவில் முதல் இடத்தை வென்றார்.
இருவருக்கும் தலா மூவாயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனிடையே, சிறந்த போட்காஸ்ட் (Podcast) செய்திக்காக நொர் ஹயாதி யாகுப் சிறந்த அகப்பக்க செய்திக்காக எர்டா குர்ஷியா பாசீர் மற்றும் சிறந்த இலக்கவியல் ஊடக செய்திக்காக விஷ்வானி குமார் ஆகியோர் இரண்டாம் நிலை வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அம்மூவருக்கும் தலா இரண்டாயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவர்களின் அவ்வெற்றி மிகவும் பெருமைக்குரியது என்று கூறிய பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி, டத்தீன் படுக்கா நூர்-உல் அஃபீடா கமாலூடின் தரமான செய்திகளை வழங்குவதில் பெர்னாமாவின் உயர் அர்ப்பணிப்பு என்றும் தெரிவித்தார்.
“மேலும் இந்த வெற்றி பெர்னாமாவின் நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஐந்து தளங்களில் உள்ளவர்களை இதர ஊடக விருது விழாவில் வெற்றிப் பெறுவதற்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்," என டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.
இந்த ஆண்டு விருதளிப்புக்கு, பல்வேறு ஊடக தளங்களில் இருந்து 115 பங்கேற்பாளர்கள் போட்டியிட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)