சபா, 14 நவம்பர் (பெர்னாமா) -- சபா மாநில தேர்தல் காலகட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு தேவைப்படும் 15 பிரச்சனைக்குரிய இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் கோத்தா கினபாலு சுற்றுவட்டாரம் மற்றும் சபாவின் கிழக்கு கடற்கரை ஆகியவை அடங்கும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
''குறிப்பாக கோத்தா கினபாலு பகுதியிலும், சபாவின் கிழக்கு கடற்கரையிலும், நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு பல இடங்கள் உள்ளன. எனவே, கட்டுப்பாட்டை மீறி ஏதாவது நடந்தால், பிரச்சனைக்குரிய பகுதிகள் மற்றும் நிர்வாக கட்டிடங்கள் அல்லது அரண்மனையை உட்படுத்திய பல பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை உறுதிசெய்வோம். இதனால், அவற்றின் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில்.
இன்று Op PRN சபா ஊழியர்களுடனான தேசிய போலீஸ் படைத்தலைவரின் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் அவ்வாறு கூறினார்.
சபாவில் அனைத்து தரப்பினரும் அமைதியைப் பேணுவதோடு அவதூறு மற்றும் இனவெறி தொடர்பான பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
நாளை நடைபெறவிருக்கும் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, அம்மாநிலம் முழுவதும் 25 வேட்புமனு தாக்கல் மையங்களில் 4,300 போலீசாரை, அரச மலேசிய போலீஸ் படை PDRM, பணிக்கு அமர்த்தும்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)