கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- தொடர்பு சாதனங்களில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி-இன் அங்கீகாரம் மற்றும் முத்திரைக்கான அவசியம் குறித்து கடை உரிமையாளர்களும் ஊழியர்களுக்கும் விளக்கமளிக்க நாடு முழுவதும் உள்ள 359 தொடர்பு சாதன வளாகங்களை அவ்வாணையம் பார்வையிட்டது.
“Direct Engagement” திட்டத்தின் கீழ் 2024-ஆம் ஆண்டு ஜூன் தொடங்கி இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்.சி.எம்.சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு சாதனமும் பாதுகாப்பு, அசல், தரநிலைகள் மற்றும் இணைய இணைப்பைப் பின்பற்றுவதுடன் அதிர்வெண்களில் இடையூறை ஏற்படுத்தாததை உறுதிசெய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்.சி.எம்.சி அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அமலாக்கத்தின் போது வர்த்தகர்களிடமிருந்து நேர்மறையான கருத்துகளே பெறப்பட்டதாக அவ்வாணையம் கூறியது.
சந்தையில் உள்ள தொடர்பு சாதனங்களுக்குத் தரநிலை பின்பற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து பயனீட்டாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதோட தரநிலைகள் பின்பற்றப்படும் தொடர்பு சாதனங்கள் மட்டுமே சந்தையில் விற்கப்படுவதற்கும் எம்.சி.எம்.சி-இன் தொடர் உறுதிப்பாட்டை இம்முயற்சி பிரதிபலிக்கிறது.
பயனீட்டாளர்களும் எம்.சி.எம்.சி அங்கீகரித்த மற்றும் அதன் முத்திரை கொண்ட சாதனங்களை வாங்க நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)