கோலாலம்பூர், 12 நவம்பர் (பெர்னாமா) -- சமூக ஊடகங்களில் பெண்களை உட்படுத்தி மோசமான கருத்துகளைப் பதிவேற்றுவது அல்லது அவர்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் தவறாக விமர்சிப்பது ஆகியவை மட்டும் இலக்கவியல் வன்முறையாக கருதப்படாது.
மாறாக, ஜிபிஆர்எஸ் எனப்படும் இடக்குறியீட்டுக் கருவியைப் பயன்படுத்தி அவர்களைக் கண்காணிப்பது, இணையம் வாயிலான பரிவர்த்தனையின் போது பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகங்கள் ஆகியவையும் பெண்களை அல்லது சிறுமிகளை உடல் ரீதியாகவும் மனோரீதியாவும் துன்புறுத்தி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால், அதுவும் இலக்கவியல் வன்முறையாகவே வகைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் வழக்கறிஞர் யோகேஸ் எம்.வீரசுந்தரம்.
"பொதுவாக மேற்கொண்ட ஆராய்ச்சி ஒன்றில் 76.7 விழுக்காட்டு பெண்கள் இணையம் அல்லது இலக்கவியல் தொடர்பிலான பகடிவதை பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவது தெரியவந்துள்ளது. பகடிவதைகள் பலவகைகள் இருந்தாலும் அதில் இணைய பகடிவதையே முதன்மையாக உள்ளது," என்று யோகேஸ் தெரிவித்தார்.
அதிலும் அண்மைய காலமாக 18 வயதிற்கு கீழ்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் செயல், அவர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் டெலிகிராம், WhatsApp போன்ற சில பிரபலமான சமூக ஊடகங்களில் பெண்களையும் சிறுமிகளையும் உட்படுத்திய ஆபாசக் காணொளிகள் அடங்கிய தொகுப்புகளும் கணிசமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டு வரும் அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டார்.
"உங்களின் முகத்தை உங்கள் அனுமதியின்றி செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் தவறான முறையில் காணொளியாக்குவது, இல்லையெனில் அதன் படங்களை உருவாக்கி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆகிய செயல்களும் இலக்கவியல் வன்முறைகளாக கருதப்படுகின்றன. நேரடியாக மட்டுமின்றி மறைமுகமான முறையிலும் பெண்களுக்கு சிலர் அச்சுறுத்தல்களையும் மன உளைச்சலையும் கொண்டு வருகிறார்கள். இதுவும் ஒருவித இலக்கவியல் வன்முறையே," என்றார் அவர்.
இதைத் தவிர்த்து, உடல் அளவில் காயங்களை ஏற்படுத்துவது, கொலை செய்வது, பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவது அல்லது வணிகத்தில் ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அச்சுறுத்துத்துவதும் பெண்களுக்கு எதிரான இலக்கவியல் வன்முறையாகவே கருதப்படுவதாக யோகேஸ் கூறினார்.
அதிலும் சமூக ஊடகத்தின் பரவலான வளர்ச்சிக்குப் பின்னர், பாலியல் துன்புறுத்தலினால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யோகேஸ் வருத்தம் தெரிவித்தார்.
உடல் மற்றும் மன அளவில் பெண்களையும் சிறுமிகளையும் பாதிக்கும் இலக்கவியல் வன்முறைகளைக் குறைக்கும் வண்ணம் அரசாங்கமும் சில சட்டதிட்ட மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாக யோகேஸ் விவரித்தார்.
அதேவேளையில், செக்ஷன் 507-இன் கீழ் doxing எனப்படும் ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரின் சுய விவரங்களை மற்றவருக்கு பகிர்வதும், தொடர்பு பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் ஒரு பெண்ணைப் பற்றிய தவறான பதிவேற்றத்தை செய்வதும் இலக்கவியல் வன்முறையாக கருதப்படுவதால், அக்குற்றத்தைப் புரிவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்டபோது யோகேஸ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)