கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் உறுதியான மற்றும் துணிச்சலான அமலாக்கம் வரலாற்றில் மிகவும் பயனுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளது.
அந்த அமலாக்கத்தினால் நாட்டில் 1,550 கோடி ரிங்கிட் மதிப்பிலான கசிவுகள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம், உள்நாட்டு வருமான வரி வாரியம், எல்.எச்.டி.என், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கே.பி.டி.என், அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் மற்றும் சில நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் வழியாக அது சாத்தியமடைந்ததாகவும் பிரதமர் எடுத்துரைத்தார்.
எந்த வகையான ஊழல் கடத்தல் அல்லது இணைய மோசடி நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் சமரசம் கொள்ளாது என்று கூறிய அன்வார் அது தொடர்பான 20 வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் நிலையில் தொடர் நடவடிக்கைகளைத் தேசிய சட்டத்துறைத் தலைவர் மேற்கொண்டு வருவதகாவும் அவர் குறிப்பிட்டார்.
''பெரிய கும்பல்கள், பெரிய கடத்தல் வழக்குகள், பல தசாப்தங்களாக செயல்பட்டு வரும் சந்தேகத்திற்குரிய மோசடி நிறுவனங்கள். அனைத்து தெரியும். ஆனால் அவர்கள் மிகவும் வலிமையானவர்கள், மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அதிக நிதி வைத்திருப்பதால் நடவடிக்கை எடுக்க துணிவில்லை. அவர்களின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியும். ஆகவே, எஸ்.பி.ஆர்.எம், எல்.எச்.டி.என், கே.பி.டி.என், பி.டி.ஆர்.எம் ஆகியவற்றிற்கு எனது மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், அவர்கள் தற்போது தங்கள் உறுதியான நிலைப்பாட்டை காட்டியுள்ளனர்,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் அதிநவீன அமலாக்க உபகரணங்களின் பயன்பாட்டை வலுப்படுத்துவது உட்பட, ஊழல், கசிவு மற்றும் கடத்தலில் இருந்து நாட்டை தூய்மைப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)