புத்ராஜெயா, 7 நவம்பர் (பெர்னாமா) -- அண்மையில் தென் கொரியாவிற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் வெற்றி குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர் கலந்து கொண்ட அனைத்து கூட்டங்களும் இரு தரப்பு விவாதங்களும் சுமூகமாக நடைபெற்று நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுவதாக தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தென் கொரியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி சீன அதிபர் சீ ஜிப்பிங் உடன் பிரதமர் மேற்கொண்ட சந்திப்பையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தையும் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் பாராட்டினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அவ்வாறு கூறினார்.
ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு APEC பொருளாதார தலைவர்கள் கூட்டம் AELM-இல் கலந்து கொள்வதற்காக அக்டோபர் 30 முதல் நவம்பர் முதலாம் தேதி வரை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தென் கொரியா சென்றிருந்தார்.
மற்றொரு நிலவரத்தில், மலேசியா-அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் ART தொடர்பான ஆவணங்களை தற்போது முதலீடு வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சின் இணையத் தளத்தில் அணுகி காணலாம் என்று டத்தோ ஃபஹ்மி கூறினார்
ART தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதிலும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கூட்டரசு அரசியலமைப்பின் உணர்வு அல்லது விதிகளுக்கு முரணான எந்த விதிகளும் இல்லை என்று நவம்பர் நான்காம் தேதி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மக்களவையில் தெளிவுப்படுத்தினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)