சிலாங்கூர், 7 நவம்பர் (பெர்னாமா) -- GISBH குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ நசிருதீன் மொஹமாட் அலி மற்றும் அக்குழுவின் 12 உயர்மட்ட தலைவர்களுக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று 15 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதோடு சட்டவிரோத அமைப்பின் உறுப்பினர்களாக இருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒன்பது பெண் உறுப்பினர்களுக்கு தலா 4,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
இன்று, காஜாங் சிறைச்சாலையில் நீதிபதி டத்தோஸ்ரீ லத்தீபா மொஹமாட் தஹார் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது 1966-ஆம் ஆண்டு சங்கச் சட்டம் செக்ஷன் 43 இன் கீழ் விருப்பக் குற்றச்சாட்டில் அவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து அதாவது 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 12-ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனைகள் தொடங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தரப்பு வாதிட்ட தண்டனையின் மோசமான காரணம் மற்றும் தண்டனையைக் குறைப்பதற்கான பிரதிவாதியின் மேல்முறையீட்டை தவிர்த்து அனைத்து தனிநபர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மனம் திருந்தி தங்கள் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்ததில் நீதிபதி திருப்தி அடைந்தார்.
இதனிடையே, அபராதம் செலுத்தத் தவறினால் அந்த ஒன்பது பெண்களுக்கும் ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)