சிலாங்கூர், 5 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் அரச மலேசிய சுங்கத் துறை ஜே.கே.டி.ம் அண்மையில் கிள்ளான் துறைமுகத்தில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
அதில் அதிகாரப்பூர்வ உரிமம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட 79 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய பழைய உலோக மற்றும் அலுமினிய பொருட்கள் கொண்ட 53 கொள்கலன்களை அது பறிமுதல் செய்தது.
'Operasi Besiport' எனும் இச்சோதனை நடவடிக்கை கிள்ளானின், வடக்கு- மேற்கு துறைமுகத்தில் உள்ள மலேசிய கட்டுமான தொழில்துறை மேம்பாட்டு வாரியம் CIDB மற்றும் SIRIM நிறுவன ஒத்துழைப்புடன் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.
அந்த கொள்கலன்கள் அனைத்தும் ஒரே நிறுவனத்திற்கு சொந்தமானவை என்று மாநில சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் வான் நோரிசான் வான் டாவுட் தெரிவித்தார்.
''35 கொள்கலன்களில், கட்டுமானத் தொழில்துறைக்குப் பயன்படுத்தப்படும் 'steel structure' வகையிலான இரும்பும், 18 கொள்கலன்களில் அலுமினியமும் பழைய உலோகங்களும் இருந்தது தீவிர சோதனை நடவடிக்கையில் தெரிய வந்தது,'' என்றார்
WPKL சுங்கத்துறை இயக்குநர் வான் நோரிசான் வான் டாவுட்.
இன்று, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச சுங்கத்துறை வளாகத்தில் நடைபெற்றச் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அப்பொருட்கள் 10 லட்சத்து 98 ஆயிரத்து 888 ரிங்கிட்டை உட்படுத்திய இறக்குமதி வரி மற்றும் சுங்க வரியை உள்ளடக்கி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதை வான் நோரிசான் சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவம் குறித்து 1967ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம் செக்ஷன் 135(1)(a)-வின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)