கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- தாய்லாந்து - கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது பாராட்டினைத் தெரிவித்து கொண்டார்.
தென்கிழக்கு ஆசியாவின் அண்டை நாடுகளுக்கு இடையில், ஒரு வரலாற்று ஒப்பந்தத்தை எளிதாக உருவாக்கியதில், அன்வாரின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தின் கையெழுத்திட்டதன் மூலம், நீண்ட காலமாக மோதலில் இருந்த கம்போடியா - தாய்லாந்தின் பகைமை மனப்பாங்கு டத்தோ ஶ்ரீ அன்வாரின் தலையீட்டால் அமைதி நிலைக்கு திரும்ப துணைப் புரிந்துள்ளதாகவும் டோனல்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.
"மலேசிய பிரதமர் அன்வாருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் ஆரம்பத்திலேயே அவரை அழைத்து, "உங்களுக்குப் பக்கத்தில் இரண்டு நாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். எங்களுக்கு மூன்றாவது இடம் தேவை. எங்களுக்கு ஒருவித நடுநிலை இடம் தேவை" என்று கேட்டேன். அவர் அங்கே இருந்தபோது நான் அவரிடம் சொன்னேன், "உங்களுக்குத் தெரியும், இது தீர்க்கப்பட்டால், நான் உங்கள் நாட்டிற்கு வருகிறேன் என்று," என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தாய்லாந்து- கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது டிரம்ப் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, தாய்லாந்து - கம்போடியா அமைதி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் பங்கு மற்றும் அர்ப்பணிப்பிற்காக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரும் நன்றி தெரிவித்தார்.
வட்டாரத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் டிரம்பின் அக்கறை மற்றும் உறுதிப்பாட்டையும் அன்வார் குறிப்பிட்டார்.
"இந்த முயற்சியை இன்னும் அதிகமாக ஆதரிக்கும்படி வலியுறுத்தி, உங்களது அழைப்பைப் பெற்றபோது, விரைவான அமைத்திக்கான தீர்வை வலியுறுத்துவதற்காக இரு பிரதமர்களையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் அழைத்ததற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுவேன்," என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)