ஜாலான் பார்லிமன், 23 அக்டோபர் (பெர்னாமா) -- 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கான இடமாகக் கோலாலம்பூரைத் தேர்வு செய்யும் முடிவு என்பது போதுமான வசதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக முதலில் புத்ராஜெயா பரிந்துரைக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆனால், 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொள்வதால் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அது ஏற்புடையதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காகத் தங்கும் விடுதிகள் முன்னதாகப் பதிவு செய்திருக்கும் நிலையில் அதிக தங்குமிட வசதி கொண்டிருக்கும் கோலாலம்பூர் பெரிய அளவிலான மாநாட்டை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
''ஏன் புத்ராஜெயாவில் இல்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளது. வசதிகள் போதுமானதாக இல்லை என்பதை முன்னதாக வெளியுறவு அமைச்சர் விளக்கியுள்ளார் என்று நினைக்கிறேன். மண்டபம் நன்றாக உள்ளது ஆனால் தங்குமிட வசதிகள் போதுமானதாக இல்லை. சீனா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரு தங்கும் விடுதியை பதிவு செய்துள்ளனர். அவை மூன்று மாடிகள் அல்ல ஒரு தங்கும் விடுதி முழுவதும். இரண்டு பேர் இரண்டு விடுதிகளை நிர்வகிக்கின்றனர். எனவே, எங்களுக்குப் பொதுமானதாக இல்லை அதனால் தான் நாங்கள் கோலாலம்பூரைத் தேர்வு செய்தோம்'', என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆசியான் தலைமைப் பதவி உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அதிகரிப்பது மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் உள்ளூர் நாணயங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது போன்ற பொருளாதாரம் சார்ந்த விவகாரங்கள் இம்முறை ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று அன்வார் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)