கோலாலம்பூர், 21 அக்டோபர் (பெர்னாமா) -- பெருநாள்கள் என்றாலே விருந்துகளுக்குப் பஞ்சமிருக்காது.
அதிலும், தீபாவளி பண்டிகையின் போது அறுசுவையில் ஒரு சுவைகூட குறையாத அளவுக்கு உணவுப் பதார்த்தங்களும் பலகாரங்களும் வீட்டின் மேசைகளில் வரிசை பிடித்து நிற்கும்.
எனினும், இத்தகைய பெருநாள் காலங்களில் உணவுகளை உட்கொள்வதில் அதிகமாக கவனமாக இருப்பது, சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமாகும் என்கின்றார் உணவியல் நிபுணர் டாக்டர் கனிமொழி அரசு.
பெருநாள் காலத்தில் உணவுக்கு கட்டுப்பாடு விதிப்பது கடினமான ஒன்று என்றாலும், உணவின் அளவையும், முறையையும் சற்று மாற்றிக் கொள்வதன் மூலம் விருப்பப்பட்ட உணவுகளைத் தடையின்றி உட்கொள்ள முடியும் என்று டாக்டர் கனிமொழி அரசு கூறினார்.
முறுக்கு, அதிரசம், லட்டு, நெய் உருண்டை போன்ற இனிப்பு வகைகளை உட்கொள்வதையும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தயார் செய்யும் பானங்களில் சேர்த்து கொள்ளும் இனிப்பின் அளவையும் குறைத்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
''உங்கள் நண்பர்கள் வீட்டிற்கு வரும்பொழுது நிறைய பால் சேர்த்து தேநீர் அல்லது சீராப் என்று சொல்லக்கூடிய இனிப்பு பானத்தில் அதிக சக்கரை சேர்த்து கொடுப்பீர்கள். எனவே, நீங்கள் என்ன செய்யலாம் என்றால் அதில் இனிப்பு அல்லது பானத்திற்கான திரவத்தைக் குறைத்து போடலாம். எனவே அதில், கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், சுடு நீர் வைக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில், அதில் கொழுப்புச் சத்து இருக்காது", என்று அவர் கூறினார்.
நெய் சோறு, பிரியாணி என்று வழக்கத்திற்கு மாறாக, அதிகளவிலான உணவு வகைகளை உண்டு மகிழ்வது தீபாவளி கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும், அதனை சமைக்கும் முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
குறிப்பாக, அதிக கொழுப்புச் சத்து மற்றும் எண்ணெய் நிறைந்த இறைச்சி வகைகளை சமைக்கும் முறைகள் குறித்தும் அவர் இவ்வாறு விவரித்தார்.
''நீங்கள் ஆடு மற்றும் கோழி போன்றவைகள் சமைப்பீர்கள். அவ்வாறு சமைக்கும் போது ஆட்டில் உள்ள கொழுப்பு பகுதியை நீக்கி விடலாம். அதேபோல, கோழி சமைக்கும் போது அதன் தோள் பகுதியை நீக்கி விடலாம். ஏனெனில், அதில் தான் அதிகமான கொழுப்பு ச் சத்து உள்ளது. அது நம் இருதயத்திற்கு நல்லதல்ல", என்றார் அவர்.
இதனிடையே, தீபாவளி மகிழ்ச்சியில் திலைத்திருந்தாலும், உடற்பயிற்சி செய்வதை மறந்து விடக்கூடாது என்று டாக்டர் கனிமொழி நினைவூட்டினார்.
தீபாவளியின் போது நடத்தப்படும் விருந்து உபசரிப்புகளில், இனிப்பு மற்றும் காரமான பலகார வகைகளை அதிகம் உண்பதால் செரிமானப் பக்குவத்தை உடல் இழப்பதாக அவர் கூறினார்.
''பண்டிகை காலங்களில் உடல்பயிற்சி செய்வதையும் மறந்து விடக்கூடாது. உங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் நீங்கள் நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது நடனமாடலாம். ஏனென்றால், இவையெல்லாம் நம் உடலிலுள்ள கூடுதலான கொழுப்புச் சத்தை குறைக்க உதவும்", என்று அவர் தெரிவித்தார்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மிக முக்கியம் என்பதால் பண்டிகை காலங்களில் மட்டுமின்றி தினசரி வாழ்க்கையிலும் உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு டாக்டர் கனிமொழி அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)