ஜாலான் பார்லிமன், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- ஒரு உள்நாட்டு பயனீட்டாளர்களுக்கும் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திலும் அதிகபட்சமாக இரண்டு சிம் அட்டைகளை மட்டுமே பதிவு செய்வதை வரம்பிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதே வேளையில், அந்நிய நாட்டினர் எந்தத் தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்தாலும் மொத்தம் இரண்டு சிம் அட்டைகளை மட்டுமே கொண்டிருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
சிம் அட்டை மோசடி, மிரட்டல் மற்றும் போலியான சமூக ஊடகக் கணக்குகள் பதிவு போன்ற தவறான பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
மேலும், இவ்வாறான தவறான செயல்கள் போலியான அடையாளங்களின் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எனவே, இப்போது எம்சிஎம்சி ஒரு பொது விசாரணையை நடத்துகிறது. அதில் ஒவ்வொரு மலேசியருக்கும் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அதிகபட்சம் 2 சிம் அட்டைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். அவர்கள் வெளிநாட்டினராக இருந்தால் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்தாலும் சரி அவர்கள் 2 சிம் அட்டைகளை மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்," என்று தியோ நீ சிங் தெரிவித்தார்.
இன்று, மக்களவையில் லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ இந்தேரா டாக்டர் சுஹைலி அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குத் தியோ அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)