கோலாலம்பூர், 17 அக்டோபர் (பெர்னாமா) -- விளக்குகளை ஏற்றி, இனிப்புகளைப் பகிர்ந்து, ஆண்டுதோறும் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்குப் பின்னால் ஓர் ஆழ்ந்த பாரம்பரியமும் மரபு வழி சிந்தனையும் மறைந்திருக்கின்றன.
அதில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக முன்னோர்களுக்குப் படையல் வைத்து நன்றி செலுத்தும் வழக்கமும் ஒன்றாகும்.
வாழ்வின் அடித்தளமாக இருந்த முன்னோர்களின் பெருமையை நினைவுக்கூறும் இந்த வழக்கத்திற்கான முக்கியத்துவம் என்ன ? இன்றைய காலத்தில் அது எவ்வாறு மாற்றம் கண்டுள்ளது ?
அது குறித்து விளக்குகின்றார் நெகிரி செம்பிலான், சிரம்பானில் உள்ள ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின், சிவ ஸ்ரீ தர்ஷன் குருக்கள்.
குலத் தெய்வம் அல்லது முன்னோர்களின் ஆசியும் அருளும் இல்லாமல் எந்தவொரு சுபக்காரியமும் முழுமையடையாது என்ற நம்பிக்கை, இந்தியர்கள் மத்தியில் தொன்று தொட்டு இருப்பதால் அவர்களுக்கு படையல் வைத்து நன்றியுடன் வணங்கும் மரபு உருவானதாக, சிவ ஸ்ரீ தர்ஷன் குருக்கள் கூறினார்.
ஆன்மீக செயலாக மட்டுமின்றி குடும்ப உறவுகளை இணைக்கும் ஓர் உறவு பாலமாகவும் படையலிடும் மரபு விளங்குவதாக, அவர் தெரிவித்தார்.
''ஆதிகாலத்திலிருந்து தங்களின் குடும்ப வழக்கம் அல்லது சமய வழக்கத்தின்படி எவ்வாறு செய்யப்பட்டு வந்ததோ அதேபோன்று தான் படையலிடப்பட வேண்டும். இதன் மூலம் என்ன நன்மைகள் என்றால் அனைத்து குடும்பத்தாரும் அல்லது சமயத்தாரும் ஒன்றுச் சேர்ந்து படையலிடும் போது குடும்பம் மற்றும் சமூகத்தினரின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கின்றது'', என்று தர்ஷன் குருக்கள் கூறினார்.
இதன் மூலம் தொடங்கப்படும் காரியம் முன்னோர்களின் ஆசியுடன் எவ்வித தடைகளுமின்றி சிறப்பான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் இந்திய சமூகத்தின் மத்தியில் நிலவுவதாக அவர் கூறினார்.
மேலும், படையல் வைத்து முன்னோர்களின் ஆசியைப் பெறுவதால் வாழ்வில் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நீங்கி புதிய தொடக்கங்களுக்கு வழி வகுக்கும் என்று தர்ஷன் குருக்கள் விவரித்தார்.
''முன்னோர்களின் மூலம் அவர்களை நினைவுக்கூர்ந்து, அவர்களால் வரப்படுகின்ற சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகும் வண்ணம் இந்த படையலிடப்படுகின்றது. அனைவரும் உங்களது வீடுகளில் அல்லது சமூகத்தில் நடைபெறுகின்ற கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக முன்னோர்களை அல்லது குலத்தெய்வங்களை நினைத்து படையலிட்டு அந்த காரியத்தைத் தொடங்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று இன்புற்று வாழ்வீராக'', என்றார் அவர்.
இதனிடையே, காலங்காலமாக பின்பற்றி வரும் படையலிடும் முறை மாறி, தற்போது சமகால சூழ்நிலைக்கு ஏற்ப புதுமையான வடிவங்களோடும் நடைமுறைகளோடும் இது தொடரப்படுவதாக, தர்ஷன் குருக்கள் தெரிவித்தார்.
''காலப்போக்கில் படையலிடும் மரபானது அழிவுப் பெற்று வருகின்றது. அதாவது, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற விடயங்கள், அதாவது படையலுக்கு உகந்ததாக இல்லாமல் பரப்பப்படுகின்ற ஒரு சில காணொளிகளினால் இந்த மரபு வழியானது அழிவு பெற்று வருகின்றது'', என்று அவர் கூறினார்.
மேலும், வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களினாலும் தற்போது முன்னோர்களுக்குப் படையலிடும் மரபு குறைந்து வருவதாக, அவர் கூறினார்.
எனவே, காலம் மாறினாலும் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வரும் இந்த மரபின் நோக்கம் மாறாது நிலைத்திருக்கும் என்று சிவ ஸ்ரீ தர்ஷன் குருக்கள் தெளிவுப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)