Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கோபிந் சிங் டியோவின் தீபாவளி உபசரிப்பில் பிரதமர்

20/10/2025 06:22 PM

கோலாலம்பூர், அக்டோபர் 20 (பெர்னாமா) -- தீபாவளியை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோவின் இல்லத்திற்கு வருகை புரிந்தார்.

பல்லின மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்டாடுவதே இந்த வருகையின் நோக்கமாகும் என்று தமது முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி உட்பட சில மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நாளில், இந்தியர்கள் அனைவரும் அன்புக்குரிய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட டத்தோ ஶ்ரீ அன்வார் தமது வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஒற்றுமையை விதைப்பது, உதவிகள் தேவைப்படுபவர்களை அரவணைப்பது, நாட்டின் பலமாக இருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு இத்திருநாளைக் கொண்டாடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் தெரிவித்திருந்தார்.

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த ஒரு நாடாக, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் உணர்வை எப்போதும் வளர்த்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)