ஜாசின், 15 அக்டோபர் (பெர்னாமா) -- மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள பள்ளி ஒன்றில், படிவம் மூன்று பயிலும் மாணவியை ஐந்தாம் படிவத்தைச் சேர்ந்த நான்கு ஆண் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை, அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் குற்றம் சாட்டப்படுவதற்கான முடிவு, இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
"இந்த வாரத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கான முயற்சிக்காக, இன்று விசாரணை ஆவணங்கள் டி.பி.பி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று காலை வழங்கப்பட்டது. முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, மலாக்கா, ஜாசின் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அதனை கூறினார்.
அண்மையில், மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சந்தேகிக்கப்படும் எஸ்.பி.எம் தேர்வு எழுதவிருக்கும், 17 வயதுடைய நான்கு ஆண் மாணவர்கள், விசாரணைக்கு உதவ இம்மாதம் 11-ஆம் தேதி தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் அக்டோபர் 11 தொடங்கி 16-ஆம் தேதி வரை ஆறு நாள்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டம் செக்ஷன் 375B-இன் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)