எகிப்து, 14 அக்டோபர் (பெர்னாமா)-- காசா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்திலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி இருப்பதை உலகிற்கும் மத்திய கிழக்கிற்கும் ஒரு மகத்தான நாள் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் அவ்வாறு கூறினார்.
உலகத் தலைவர்கள் மிகவும் விரிவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுத்துள்ள ஓர் ஆவணத்தில் கையெழுத்திடப் போவதாகவும் டோனல்ட் டிரம்ப் கூறினார்.
அதற்காக ஷர்ம் எல்-ஷேக்கில் கூடியுள்ள தலைவர்களை "சிறந்தவர்கள்" என்று பாராட்டிய அவர் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற உதவியதற்காக கட்டாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியை குறிப்பிட்டுக் கூறினார்.
மேலும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த வட்டாரப் போர் தொடங்கக்கூடும் என்ற அச்சங்கள் ஆதாரமற்றவை என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
மூன்றாம் உலகப் போர் மத்திய கிழக்கில் தொடங்கும் என்று கூறப்படுவதை மறுத்த அவர் அது நடக்கப்போவதில்லை என்றும் உறுதியாகக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி (ஆஸ்ட்ரோ 502)