கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- BUDI95 எனப்படும் ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகைக்கான தகுதியை, நாடு முழுவதும் 31-ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உள்ளடக்கிய மூன்று புதிய பிரிவினருக்கு விரிவுபடுத்தவிருப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் பதிவுசெய்துள்ள 17,900-க்கும் மேற்பட்ட மீனவர்கள், சபா துறைமுகங்கள் மற்றும் துறைமுகத் துறையின் கீழ் பதிவுசெய்துள்ள 4,300-க்கும் மேற்பட்ட தனியார் படகு உரிமையாளர்கள், சாலைப் போக்குவரத்துத் துறையின் கீழ் பதிவுசெய்துள்ள 9,700-க்கும் மேற்பட்ட புதிய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த விரிவாக்கம் பயனளிக்கவுள்ளது.
உதவித்தொகை வழங்கப்பட்டு தற்போது ஒரு லிட்டர் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு விற்கப்படும் ரோன்95 பெட்ரோலை பயன்படுத்தி வரும் ஒரு கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களில், இந்த விரிவாக்கத்தினால், தற்போது இப்புதிய பிரிவினரும் இணைவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நிதி அமைச்சு குறிப்பிட்டது.
அதேவேளையில், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட இதர மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாத படகுப் பயனர்கள் தொடர்பான கூடுதல் தரவுகளும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, முழுநேர ஓட்டுநர்களுக்கான தகுதி உச்சவரம்பை மாதத்திற்கு 300 லிட்டருக்கும் மேல் அதிகரிப்பதை செயல்படுத்துவதற்காக, தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம், ஏ.பி.ஏ.டி மற்றும் ஈ-ஹெய்லிங் நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]