கப்பளா பத்தாஸ், 05 அக்டோபர் (பெர்னாமா) -- கப்பளா பத்தாஸ், சுங்கை லோக்கான், ஜாலான் பெர்மாத்தாங் பாருவில் இருவரை உட்படுத்தி நிகழ்ந்த மரண விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, தகவல்களை அளிக்க முன்வருமாறு போலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தில், ஓட்டுநர் மற்றும் பயணி என நம்பப்படும் அவ்விருவரும், தாங்கள் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்ததில் கருகி மாண்டதாக, செபெராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
புரோட்டோன் சாகா ரக காரில் பெர்மாத்தாங் திகாவில் இருந்து சுங்கை டூவாவிற்கு அவ்விருவரும் பயணித்ததாக நம்பப்படும் நிலையில், அவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏ.சி.பி அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த அக்கார் சாலையின் இடது புறத்தில் இருந்த மணல் குவியலில் கவிழ்ந்து தீப்பிடித்துக் கொண்டதாக நம்பப்படும் வேளையில், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 41(1)-இன் கீழ் இவ்விபத்து விசாரிக்கப்படும் வேளையில், பிரேத பரிசோதனைக்காக அவர்களின் உடல் Kepala Batas மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]